thamizhini

Nov 27, 2010














உன் மடியில் ஊறிக்கிடக்கும் என் தூக்கம் 
கலைந்துவிடக் கூடாது என்பதற்காக 
கடிக்கும் நுளம்புடன் 
காந்தியாய் மாறி போரிடும் கால்கள்.....
கனவுகண்டு விழித்தெழும் போதெல்லாம் 
தலைதடவி தூக்கமூட்டும் 
உன் கைகள்......
இமைப்பொழுதில் என் கனவுகளைத் திருடி 
மறுகணத்தில் 
நனவாய்த் திருப்பித் தரும் 
உன் உடல் சொட்டும் வியர்வைகள்......
எனக்கொன்றென்றால் 

முதல்த் துளி சொட்டும் 
உன் கண்கள்.....
பாதி நேரம் எனக்கும், 

மீதி நேரம் எனக்காகவும் 
துடிக்கும் உன் இதயம்....
என் முத்தங்களை எல்லாம் 

சேமித்து வைப்பதற்காகவே 
உன் கன்னதுக்குழி............
மீண்டும் நான் உனக்கே மகளாக
இவளவும் போதும் அப்பா............

Oct 16, 2010













இருக்கும் போது 
தோட்டத்துக் காவலுக்காக 
வளர்க்கப்பட்ட தாத்தா...
இன்று 
பூமாலையுடன் 
படத்தில் தொங்குகிறார்...!












வடித்த கல்லுக்கு 
பாலுட்டுகிறார்கள்....
தவித்த வாய்க்குத் 
தண்ணீர் கொடுக்காதவர்கள்....!












'அம்மா! 
இங்க பாரும்மா எவ்வளவு அழகான ஊர்'
பறந்து வந்த 
செய்தித்தாளைப் பாக்கிறாள்... 
அது அம்பானி வீட்டின் 
ஒரு பகுதி 
என்று தெரியாமல்....!
நோய்கள் என்னைத் 
தின்று தீர்த்துவிடும் 
என்பதற்காக 
பல உணவுகள் 
நான் தீண்டாமலே 
தீர்ந்து போய்விட்டன....












சோகத்துடன் 
வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறது 
பிச்சைப் பாத்திரம்...
தெருத்தெருவாய் 
கையேந்தும் 
போலீஸ் வாகனத்தை....!
இலவசக் கழிவறை 
தெருச்சுவ்ர்கள்..

Oct 1, 2010

















அழுதிருக்கிறேன்.....
செத்துத் தொலையலாம் 
என்றும் நினைத்திருக்கிறேன்.....
நல்ல வேளை...
குடிசை வீடென்பதால்
சிலந்தியைக் கண்டேன்.......

Sep 25, 2010


















என் குறைகள் எல்லாவற்றையும்

களைந்துவிடாதே....
நிர்வாணமாக அலைய
நான்
தயாரில்லை...












மண்ணுக்கு வந்துதானே 
மழைத்துளி உன்னைத் தொட்டது...
உதிர்ந்த 
உன் வண்ணங்கள் 
வானத்தில் எப்படி????

















அகிம்சையே வெல்லும் 
என்றுவிட்டு 
எத்தனை அம்புகளைப் 
பாச்சிவிட்டாய்... 
போதும் 
உன் பார்வையை திருப்பு.....














நுனிநாக்கில் ஊறிக்கிடந்த நம்பிக்கையும் 
விழுந்து போச்சு...
கண்ணன் வருவான், சேலை தருவான் 
எல்லாமே கதையாகிப் போச்சு....
மிச்சமிருந்த ஒரு காலை 
பாஸ்பரசும், இறையாண்மையும்
பங்கு போட்டிடுச்சு........
மண்ணை வளமாக்க 
உடல் எல்லாமே உரமாகிப்போச்சு.........
இறுதியில் எட்டி நின்று 
முக்கைப்போத்த  
நாங்களும் அரசியலாய்ப் போனோம்...... 
என் அக்காகளின் மானத்தைத் தின்ற நீ 
எப்படி விடுமுறைக்கு வீடு செல்கிறாய்? 
உன் கண்களுக்கு பயந்து 
உன் அம்மாவும் தங்கையும் ஓடி ஒளியமாட்டார்களா?


உன் பூட்ஸ்ரேகையில் 
இத்தனை தசைப்பிண்டங்கள் சிக்கிக் கிடக்க 
இந்த சம்பளத்தில் 
எப்படி உன்னால் வாய் நனைக்க முடிகிறது?


உணர்ச்சி நரம்பை 
அறுத்துவிட்டு தான் 
இணைப்பார்களோ ராணுவத்தில்?
இது தான் உங்கள் புத்தன் போதித்த புத்தாமோ? 


இன்னும் நீ மனித முகத்துடன் இருப்பது 
ஆச்சர்யம் தான்.....!
ஒவ்வொரு அலுவலகத்திலும்
நீளும் கைகளுக்கு
சொல்லிப் புரியாது.....
அவசரத்தில் கண்ட கனவுகளைக் கூட
எடுத்துவரவில்லை என்பது....!
நான் 
உயிர் பெற்ற  
அம்மாவின் வயிற்றில்
இன்று 
ஷேல்த்துண்டு....... 
தன் சகோதரனை நசித்த
பூட்ஸ் காலில் 
இறுக்கக் கடித்துவிட்டு வருகிறது 
சாலையோர எறும்பு, 
பார்த்துகொண்டு இருக்கிறேன் நான்.... 

Sep 24, 2010

தொலைந்துபோன தகவலும் இல்லை,
வந்துசேர்ந்ததாய் ஒரு செய்தியுமில்லை, 
இதுவரை சுவைத்த அனுபவமுமில்லை... 
எங்கே ஒளிந்திருந்து 
பூச்சாண்டி காட்டுகிறாய் 
சுதந்திரமே!!!!
நேற்றுக் கடைத்தெருவில் 
என் கண்ணீர்க் கதையை 
கிண்டல் செயும் போது புரிந்தது 
அன்று,
என்னுடன் சேர்ந்து அழுதமுகம் 
உன்னுடையதில்லை என்று...........

Sep 19, 2010









தலை வெடித்து
கையுடைந்து 
தெருவிலே துடித்தபோது 
வலித்தது.
தாண்டிப்போன அனைவருமே 
ஊனம் போர்த்தியவர்கள்.......












ஏதோ கட்சிக்காரர்கள் 
தெருச்சுவருக்கு வர்ணம் அடித்தார்களாம்..... 
கிழே ஓரத்தில் படுத்துறங்கியவனுக்கு 
அன்று தான் கொளிப்பண்டிகை........ 
தலைவர் வருகிறார்,
தெருகம்பங்களில் கூட விண்மீன் 
அதே வீதியில் குந்தியிருக்கும் அந்த குடிசை வீட்டில் 
இன்னும் ஒரு மின்மினி பூச்சி கூட 
ஒய்வெடுக்கவில்லை...........

Sep 18, 2010

ஒன்று செயுங்கள்!
வீட்டில் ஒரு நாய் வளர்த்து பாருங்கள் 
கொஞ்ச நன்றியையாவது 
கவ்விக்கொள்வீர்கள்........
காந்தி தேசம் 
ஒவ்வொரு ஓட்டுக்காகவும் 
நூறு ரூபா நோட்டில் 
சிரிக்கிறார்.... 












அப்படி என்ன வெட்கம்? 
 ஏன் என்னைக் கண்டதும் ஓடி ஒளித்துக்கொள்கிறாய்?
சூரியனும் மழையும் 
முணுமுணுத்துக்கொள்கின்றன.......... 














இங்கு போல் இல்லை அங்கு 
ஒரு ஊரையே அநாதை இல்லமாக 
ஒதுக்கி தந்திருக்கிறது 
எங்கள் அரசு......












செத்துக்கிடந்தால்
எட்டடி தள்ளி நிற்பவன்,
சொத்துக்கிடந்தால்
சோகத்துடன் கண்ணீர் தருவான்.....

Aug 27, 2010


                                                                             













நீ 
எவ்வளவு அழகுபடுத்தி 
கோயிலுக்கு அனுப்பினாலும் 
யாரும் என்னை 
கண்திறந்து பார்ப்பதில்லை....
சிற்பிக்கு புலம்பித்தள்ளுகிறது 
தெருவோரக்கல்














எப்போது தான் 

சொந்த காலில் நடக்க போகிறீர்கள்? 
உங்கள் தோட்டாக்களைக் கூட 
நாங்கள் தான் 
சுமக்கவேண்டியுள்ளது ...!

















நாங்கள் ஒரு வசிகமும் 

செய்யவில்லையே...
ஏன் உங்கள் துப்பாக்கிகள் 
எங்கள் பின்னாலே 
அலைகின்றன! 

Aug 26, 2010























சுற்றுலா  என்று 

சுடுகாடாய் போன 
எம் நிலத்தில் நின்று 
புகைப்படத்துக்கு சிரிக்க 
இப்போது எப்படி முடிகிறது என்னால்....!
























இது ஈழத் தமிழர்களின்
கண்ணீர்.....
நீங்கள் குடை பிடித்தே
செல்லுங்கள்!

Mar 31, 2010














கோயிலில் திருட்டு
தங்கமுலாம் பூசிய
கடவுள்
திருடனுடன் தப்பியோட்டம்...

Mar 30, 2010




















பாலும் பழமும் கோயிலுக்கு
கடவுள்களோ
கஞ்சியுடன்
முதியோர் இல்லத்தில். 
















தீயதைப் பார்க்காதே
தீயதைப் பேசாதே
தீயதைக் கேட்காதே
என்றார்கள்
அன்றிலிருந்து இன்றுவரை
ஊனமாகத்தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.




















ஓடியாட மைதானமுண்டு
கற்றுத்தேற பல்கலையுண்டு 
படுத்துறங்க புல்வெளிக்களுமுண்டு
இவற்றைச் செய்ய 
சுதந்திரமில்லை எமக்கு..

















சுற்றிச் சுற்றிப் பார்த்தேன்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும்
கல்லறைகள் தான்.
எம் ஊர் 
தொலைந்து போயிருந்தது....  














நேற்று நடந்த ஷெல்வீச்சில்
தன் சோதரன் தலைதெறித்த
செய்தி கேட்டு
என் மடியில் கதறி அழுகிறது
இந்த தெருவோர மரநிழல்.













ஓசோன் படையை விட்டுவிடுங்கள்.
முதலில்
துப்பாக்கி முனைத்துவாரத்தை
அடையுங்கள்.
பூமி தொடர்ந்து சுவாசிக்கும்...















அங்கு 
மரங்களில் பூக்கள் இல்லை.
வீதிகளில் மனிதர் இல்லை.
இரண்டுமே
கல்லறைகளில்.....















ஏதும் ஒரு அடகுக்கடை
காட்டுங்களேன்.
எம் உயிர் பத்திரமான
பத்திரமாக ஆவது இருக்கட்டும்.




















பாலை விட
எம் கண்ணீரென்ன 
அவ்வளவு  இனிதா 
இன்னும்
உங்களுக்குப் புளிக்கவில்லையே!














பலரின் எதிர்காலங்கள் 
கொள்ளையடித்துச்  செல்லப்படுகிறது...
'காலம் பொன்னானது'
என்று 
சும்மாவா சொன்னார்கள்????  





















உயிரை எடுத்துக்கொண்டு
ஓடி வந்துவிட்டேன்.... 
உரிமையை
அநாதையாக்கி விட்டு.















உலகிலே
அதிக கட்டிடங்கள்
எங்கள் ஊரிலுள்ள
மயாணத்தில் தான்...