thamizhini

Aug 17, 2008

வேகம்



உண்மையில் நீ
அதிஷ்டசாலிதான்.
நாமெல்லாம்
பத்துமாதம்
காத்திருந்து பார்த்த
தாய் முகத்தை
நீ
ஏழே மாதத்திலல்லவா
பார்த்துவிட்டாய


---------------------------------

Aug 16, 2008

கடைசி ஆசை


---------------------------------

உண்டியல் காசோடும்
அம்மா வளையல்களோடும்
பட்டனம் வந்தேன்
வியர்வை சிந்த.

சந்தேகத்தின் பெயரில்
சிறைப்பிடித்து
நாளை
தூக்கிலிடப் போகிறார்களாம்

என் தங்கைக்கு
கால்கொலுசும்
‘என்ர மவன்
பட்டனத்தில வேல பாக்கிறான்.
உன்ர கடன் எல்லாம்
அடுத்த மாசமே தாரேன்’ என்று
நம்பிக்கையுடன் உயிர் நீட்டும்
என் அம்மாவுக்கு
கம்மலும்
என் சட்டைப்பையில்
கொஞ்ச காசும் இருக்கு.
எப்படியாவது
என் தங்கையையும்
என் அம்மாவையும்
அநாதையில்லத்தில்
சேர்த்துவிடுங்கள்.
இதுவே என் கடைசியாசை.


---------------------------------


வெளியே வந்தேன்
படிப்படியாக
நடக்க ஆரம்பித்தேன்
முட்டிமோதி
கீழே விழுந்தேன்
பத்துமாத இரவின்
கனவுகளோடு


-----------------------------------------



நிற்கக்கூட
இடமில்லாத கூட்டங்களில்
மழையும் நுளைந்துவிடும்.
வீடு போய்ச்சேருமுன்னே
சுருண்டு படுத்துவிடும.
சூரியனும்
கேட்டுவந்த
மேடைப்பேச்சுக்களும்.


------------------------------

சுயம்




மனிதர்களாக அல்ல
மிருகங்களாக தான்
வாழ்கின்றோம்
என்பது புரிந்திருக்கும்

இந்த உலகம்
கண்ணாடியால்
உருவாகியிருந்தால்......

----------------------------

வலி



மரணம்
என்பதெல்லாம்
எனக்கு
பெரிய விடயமில்லை.
உன் நினைவுகளையே
ஏற்றுகக்கொள்ள
பழகிவிட்ட பின்.


-----------------------------------

நீடித்த ஆயுள்




புத்திசாலித்தனமாக
தப்பித்துவிட்டன
மொழி இழந்த
வார்தையை
தேர்ந்தெடுத்த
விலங்கினங்கள.;
-------------------------------------

ஏமாளிகள்




ஆளாலுக்கு
கொன்று
குவிக்கிறீர்களே!
எந்த விஞ்ஞானம்
சொன்னது
தமிழ் மனித உரத்தில்
பதவி, பட்டம்
விளைகிறது என்று.

----------------------------

வாழ்கைச்சக்கரம்




இரவினில்
சட்டென்று
கண் விழித்துவிடும்.
அந்த சில கணத்தில்
தூக்கம் தூரத்தில் நின்று
எட்டிப்பார்க்கும்.
எதிர்காலம்
பற்றிய கனவுகள்
என்னை புரட்டிப்போடும்.
என்ன தவறு செய்தேனோ
தெரியவில்லை.
சொல்லிக்கொள்ளாமலே
விடைபெற்று செல்கிறது,
என் கண்ணீர்.
சில நிமிட
தாமதத்தின் பின்
மீண்டும்
தூக்கமும் கனவும்
என்னுடன்
கைகோர்த்து நடக்கும்.
இப்படியாக
என் வாழ்கை
உருண்டோடுகிறது.


----------------------------------

அநாதை தொட்டில்கள்.




பால்மாவை
சுரந்துவரும் கரங்கள்
கேட்காமலே
தூங்கவைக்கும்
தொட்டில்கள்
கண்ணீர் துளி
துடைக்கும்
தலையணைகள்
எப்படியோ
எல்லாம் கிடைத்து விடும்.
அன்னையின் தாலாட்டில்
ஒரு குட்டி தூக்கம்
மட்டும் கிடைப்பதில்லை.
தெருவோரக்கூடையில்
கசக்கி எறியப்பட்ட
அந்த
பிஞ்சு கண்களுக்கு......

------------------------------

சுதந்திரமாம்!




கண்டவருக்கெல்லாம்
பெயர்
கூற மறுக்கும்
என் உதடுகள்
அவ்வப்போது
தூக்கிலேறுகிறது.
ஒவ்வொரு சந்தியிலும்
என் கரங்கள்
அடையாள அட்டை
காண்பிக்கும் போது.....


--------------------------

அனாதைகள் பிறப்பு!




அன்னையின்
கரங்களுக்காக
காத்துக்கிடக்கும்
என் வயிற்றுக்கும்
அந்த சில
சோற்றுக்கவழங்களுக்கும்
எப்படி புரிய வைப்பது!
நேற்றைய
குண்டுவெடிப்பு
என்னை
அனாதையாக்கியதை?

--------------------------

சிலைக்குதவாத கல்




அவ்வப்போது
பதுங்குகுழிகள் தான்
பல நாள் தூக்கத்திற்கு தலையணை.
சில சமயம்
பசியை மூட்டை கட்டி
தூர எறிந்ததும்  உண்டு.
இந்த மண்ணில்
பிறந்ததை தவிர
வேறு என்ன செய்தோம்?
எம் உரிமையை
நாம் தானே சுமக்க வேண்டும்.
அதற்கு
எம் நாக்கிற்கு மரணதண்டனை
சாத்தியமாகுமா?
இன்னும் எத்தனை காலம் தான்
‘சிலைக்குதவாத கல்’ என்று
உடைத்தெறிவீர்கள்?
ஓர் உண்மை தெரியுமா?
சிதறிப்போக
பல வெடி மருந்துகள்
வந்து விழுந்ததே தவிர
இன்னும்
ஒரு உளி கூட
உரசிச்செல்லவில்லை.


------------------------------------------

மரங்களின் சார்பில் ஒரு ?.




வெட்டினீர்கள்.
கொத்தினீர்கள்.
வாழ்கையை
வேரோடு எரித்தீர்கள்.
இறுதியில்
எம்மில் பறித்து
வயிறு நிறைத்தபோதாவது
புரிகிறதா,
எங்களால் தான்
நீங்கள்
பிழைத்துக்கொள்கிறீர்கள்
என்று?


------------------------------------------

கதறல்கள்


பிணங்கள் மிதிபடும் பூமியில்
சன்னங்கள் தீர்த்த
எம் உறவின்
கல்லறை கதறல்கள்
என் கொலுசொலி போல
கூடவே வருகிறது.

இன்று
பூக்களும் கூட
கோயில் செல்வதில்லை.
நீர் ஊற்றியவன்
கல்லறைக்கு
வாசம் சேர்க்கிறது.
வரும் வரலாற்றில்
ஆயுதங்கள்; நிரூபிக்கட்டும்.
‘முன்பு மனிதர் வாழ்ந்தனர்’ என்று....

------------------------------