thamizhini

Sep 4, 2008

முரண்பாடு



கடவுள் எப்போது இறந்தார்
உயிரோடு உள்ளவர்கள்
படத்திற்கு
நாங்கள்
மாலை போடுவதில்லையே


---------------------------

Sep 3, 2008

பிழைக்க வந்துள்ளேன்




கண்விழித்துக் கண்ணாடியில்
என்னைக் கண்டதும்
ஒரு பெருமூச்சு
அங்கு மரங்களில் பூக்கள் இல்லை
வீதிகளில் மனிதரில்லை
இரண்டுமே கல்லறைகளில்

கட்சிக் கொடிகளுக்குள்
சிக்கிச் சின்னாபின்னமான
இந்த வாழ்க்கையை சுமந்துகொண்டு
எவ்வளவு தூரம் தான் நகர்வது?
இரத்த வாடையை தொடர்ந்து
நுகர மறுக்கும் இந்த வாழ்க்கையையும்
என் கடமைகளையும்
கடல்கடந்து கூட்டிவருவதை விட
வேறு வழி தெரியவில்லை
உயிரை எடுத்துக்கொண்டு
ஓடி வந்து விட்டேன்
உரிமையை அநாதையாக்கிவிட்டு

வணிகக்காரர்கள் தான் பாவம்
அவர்கள் வரவுசெலவில்
என்னை அறவிடமுடியாக் கணக்கில்
பதிந்திருப்பார்கள்.


------------------------------------------

அவ்வப்போது
பற்பல முகமூடிகளை
மாற்றிமாற்றி அணிகிறீர்களே!

எங்கே
கழற்றிவைக்கிறீர்கள்
உங்கள்
மனித இயல்புகளை?


-----------------------------------

காதல்


இவ்வழியில் மீனவர்
நடமாட்டம் அதிகம்
நீ
உன் கண்களை
மூடிக்கொள்
-------------------------------------------------

பதுங்குகுழிகளில்
உங்கள் ஆயுதங்கள் மட்டும்
பதுங்கிக்கிடக்கட்டும்.
மீறி எம் சிறகுகள்
துண்டிக்கப்பட்டாலோ
எம் இளைஞர் தேசம்
எரிக்கப்பட்டாலோ
எம் எச்சங்களாவது
உங்கள் நாற்காலிகளை
விலங்கிடும் நாள் வரும.
அன்று, கைதட்டி வேடிக்கை பார்த்தவர்கள்
வாய்பொத்தி வாலாட்டுவார்கள.
அன்றைய நாள்
எம் சுற்றங்களின்
சுதந்திரச்சின்னமாக
பொறிக்கப்படும்.
------------------------------------------------

உயிர்தப்ப ஊர்விட்டு
பிழைத்த கொடுமை.
அறிவூட்டி
அனாதையாக்கப்பட்ட
எம்மூர் பள்ளிக்கூடங்கள்.
கொள்ளையடிக்கப்பட்டு
கொலையுண்ட
சுற்றத்துச்சோதரன்.
வளம் நிறைந்த
பூமியில்
விளைந்துகிடந்த
பட்டினிச்சாவுகள்.
இப்படி
துளித்துளியாய்
சிதைக்கப்படுகின்ற
எம்தேசம்
மறுகன்னத்தை காட்டி காட்டியே
அலுத்துவிட்டது.
இனி,
கொஞ்சம் பார்த்து
கால் வையுங்கள்.
இங்கே
அடிபட்ட
பாம்புகள் பல
காத்திருக்கின்றன!


----------------------------------------------